Sunday, August 1, 2010

இனிய தோழமைகளுக்கு........!


ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையை அகில உலக நண்பர்கள் தினமாக அமெரிக்க காங்கிரசு 1935ம் ஆண்டில் பிரகடனப்படுத்தியது. ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் மிக முக்கிய பங்கு வகிக்கும் நட்பையும் நண்பர்களையும் கௌரவப்படுத்தும் விதமாக இந்த தினம் இருக்கட்டும் என்று இந்த நாள் அமெரிக்க அரசால் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த யோசனையை மற்ற நாடுகளில் அரசுகலுக்கும் பிடித்துப் போகவே பெரும்பாலான நாடுகள் ஆகஸ்ட் மாதத்தின் முதலாம் ஞாயிற்றுக் கிழமையை உலக நண்பர்கள் தினமாக ஏற்று உத்தியோகபூர்வமாக பீரகடப்படுத்தினவாம். போரும் பகையும் இனக்கலவரங்களும் மதவெறியும் வேரோடிக் கிடக்கும் அதே உலகில் தான் இன்று இவை அத்தனையையும் தன் காலடிக்குள் மிதித்து புதைக்கக் கூடிய வலிமை மிக்க நட்பைக் கொண்டாட இன்றைய நாள் உலகின் பெரும்பாலான நாடுகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு கொண்டாடப்படுகிறது.



1997ம் ஆண்டு குழந்தைகளின் கதைகளில் வரும் வின்னி த ஃபூ என்ற கதாபாத்திரம் உலக நட்பு தூதுவராக நியமிக்கப்பட்டார். 1935ம் ஆண்டு முதன் முதலாக நண்பர்கள் தினம் வெளிப்படுத்தப்பட்ட போதும் நண்பர்கள் தினத்துக்கான முக்கியத்துவத்தை வலியுறுத்தி பல கதைகள், சரித்திர ஆதாரங்கள் வந்திருக்கின்றனவாம். புனித பைபிளில் நட்பின் கடவுளாக ஆபிரகாமை சுட்டிக் காட்டப்பட்டுள்ளதாம். அதே போல் பைபிளின் புதிய பதிப்பில் இயேசு நாதரையும், அவரது சீடர்களையும் நல்ல நண்பர்களாக குறிப்பிடுகிறதாம். (இந்த தகவல் சரியா என்று யாராவது கிறிஸ்தவ நண்பர்கள் தெரியப்படுத்தவும்.) அதே போல் மஹாபாரதக் கதையில் கிருஷ்ணன் பாண்டவர்களின் குறிப்பாக அர்ச்சுனனின் நெருங்கிய நட்புக்கு அடையாளப்படுத்தப்படுகிறார். அதே போல் கர்ணன் துரியோதனனின் தூய்மையான நட்பைப் பற்றி மிக விரிவாக விபரிக்கப்பட்டிருக்கிறது. இராமாயணத்தின் குகனின் நட்பு அற்புதமாக சிலாகிக்கப்பட்டிருக்கிறது. முழுமுதல் கடவுளான சிவனையே நாயன்மாரில் ஒருவரான சுந்தரமூர்த்தி சுவாமிகள் தனது நண்பராகத் தான் போற்றியிருக்கிறார். சமயத்தில் சுந்தரருக்கும் அவரது மனைவிக்குமிடையில் தூதும் போயிருக்கிறார் . பிசிராந்தையர் , கோப்பெருஞ்சோழருக்கிடையிலான நட்பு மிகவும் உன்னதமானது, பார்க்காமலே ஒருவரை ஒருவர் நண்பர்களாக ஏற்றுக் கொண்டு நட்பை மேன்மைப்படுத்தியவர்கள் இவர்கள் என்று வரலாறு சொல்கிறது..

நண்பர்கள் தினத்தின் அடையாளமாகவும், நினைவுச் சின்னமாகவும் ஒருத்தருக்கொருத்தர் பல பரிசுப் பொருட்களையும் வாழ்த்து மடல்களையும் பரிமாறிக் கொண்டாலும் மலர்கள் பரிமாறிக் கொள்வது போல் மனதுக்கு ஆத்மதிருப்தியைக் கொடுப்பவை வேறு எவையுமிருக்காது. நட்புக்கு அடையாளமாக மஞ்சள் வர்ண ரோசா மலர்கள் பிரபலமானவை. சில குறிப்பிட்ட மலர்கள் ஒவ்வொரு விதமான காரணத்தை , நன்பர்கள் சொல்ல நினைக்கும் வார்த்தைகளின் அடையாளங்களாக நண்பர்கள் தினமன்று தோழமைகளுக்கிடையில் பரிமாறப்பட்டுவருகின்றன. அவற்றில் சில கீழே....:
  • 13 ரோசா - என்றும் நட்புடன் நண்பர்களாக இருக்க....
  • கமெலியா மலர் (Camellia) - எல்லாவிதத்திலும் பரிபூரணமான நண்பன்/ நண்பி.
  • கார்னேஷன் மலர் (Carnation )(Pink) - ஒரு போதும் உன்னை மறக்கமுடியாது
  • கிரிஷ்ஷாந்திமம் {செவ்வந்திப் பூ தானே??} ( Chrysanthemum) - நீ ஒரு அருமையான /உயர்வான நண்பன்/நண்பி.
  • ஜெரானியம் (Geranium) (Oak Leaved) - எமது நட்பு என்றென்றும் உண்மையானது
  • ஐரிஷ் (Iris) - உனது நட்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
  • ஐவி (Ivy) - நட்பு
  • பெரிவிங்கிள் (Periwinkle) (Blue) - நட்பின் தொடக்கமாக
  • ரோசா (Rose )(Pink) - என்னுடைய நண்பனுக்காக / நண்பிக்காக.


நட்பைப் பற்றியும் நண்பர்களைப் பற்றியும் ஒருவர் எழுதி இன்னொருவர் புரிந்து கொள்ளவா வேண்டும்?? என்னைக் கேட்டால் வாழ்கையில் ஒரு நட்பாவது இல்லாத வாழ்கை சுவாரஸ்யமற்றது. நண்பர்கள் இல்லாதவன் தான் உலகில் உண்மையான ஏழை. நட்பை நேசிக்கத் தெரியாதவனும் , நண்பனை புரிந்து கொள்ளாதவனும் முட்டாள்.

"Friends are the persons who walk into your life when everyone walks out". இது ஒரு உண்மையான கூற்று. எம்மைச் சுற்றி எத்தனையோ பேர் கூடி இருப்பர். எங்கள் குதூகலங்களிலும், கொண்டட்டங்களிலும் கலகலப்பாக எத்தனையோ பேர் இருப்பார்கள்..ஆனால் எங்களுக்கென்று ஒரு இக்கட்டான நிலை வரும் போது ஒவ்வொருவராக விலகி செல்வார்கள்.. ஆனால் உண்மையான தோழமை மட்டும் விலகிப் போக மாட்டாது அல்லது அந்த நேரத்தில் எமக்கு கை கொடுக்க எம் வாழ்கையில் அந்தக் கணத்தில் ஒரு கை உதவ முன்வருமேயானால் அந்த நபர் தான் உண்மையான நண்பன்/ நண்பி.

நண்பர்கள் நிறையப் பேர் இருக்கலாம்..ஆனாஅல் மிக நெருங்கிய நட்பு என்று ஓரிருவராவால் தான் இருக்க முடியும். அவர்களை நாம் முழுமையாக உணரும் தருணம் நம் வாழ்கையில் மிகவும் வெகுமதியான நேரமாக இருக்கும். அந்த தருணத்தை வேறு எதோடும் ஒப்பிட இயலாது. கசப்பும், இனிமையும் கலந்த அனுபவங்களின் தொகுப்பான வாழ்கையில் நட்பின் பக்கங்களில் நாம் நமக்காக அனுபவித்த துயரை விட நண்பன் நமக்காக அனுபவித்த இன்னல்கள் அதிகமாயிருப்பின் நாம் நல்ல நட்பை அடைந்திருக்கிறோம் என்பது நிச்சயம். நட்பை நேசிக்கத் தெரிந்த , ஆராதிக்க தெரிந்த நல்ல நண்பன் கிடைத்த பாக்கியவான் நாம் என்று அர்த்தம். ஆனால் அத்தனை இன்னல்களை எங்களால் அனுபவித்த நண்பனுக்கு எமது நட்பு எந்தளவு நல்ல நட்பாக இருந்திருக்கும்????? :):) ஒரு நேர்மையான நண்பன் ஆயிரம் உறவுகளை விட மேன்மை தங்கியவனாகிறான்.

Forget the times that he walked by. Forget the times he made you cry. Forget the times he spoke your name. Remember-now, you're not the same. Forget the time he held your hand. Forget the sweet things if you can. Forget the times, and don't pretend. Remember-now, he's just your friend

நண்பனின் குறைகளை கவனிக்காமல் அவனுடைய தவறுகளுக்கு துணை போகாமல் அவனை நல்ல வழியில் கொண்டு செலுத்தக் கூடிய திறமையானவன் நல்ல நண்பன் ஆகிறான்.

குழும நண்பர்கள் அனைவருக்கும் நான் நல்ல தோழியாக இருந்திருக்கிறோமா என்று எமக்கு தெரியாது. ஆனால் எமக்கு நல்ல நண்பர்களை, உறவுகளை இந்த இணைய உலகம் கொடுத்திருக்கிறது...அந்த இனிய தோழமைகளுக்கு எம்முடைய நன்றிகள்.

இனிய நட்பு நிறைத்த இதயங்கள் அனைவருக்கும் எமது இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்!!

அன்புடன்
சிநேகன், சுவாதி
அஷ்வத்தாமா & அச்சுதன்

Monday, June 14, 2010

இணையம் தந்த இன்னுயிர் சகோதரிகளுக்கு என் இதயம் கனிந்த சகோதரிகள் தின நல்வாழ்த்துகள்!

அன்புடன்
சுவாதி

Friday, May 8, 2009

Thursday, September 11, 2008

தாலாட்டு பாட வா!

தாலாட்டு பாட வா!


இப்படி ஒரு முயற்சிக்கு வித்திட்டவர் முத்தமிழ் குழுமத்தின் உறுப்பினரான நலம் பெறுக ஐயா தான். ஆண்மகனுக்கோர் கவிதை என்ற இழையில் எனக்கும் பாஸ்கர் என்ற பதிவருக்குமிடையில் உருவாகவிருந்த ஒரு கடுமையான பெண்ணியம் பற்றிய விவாதத்தை மட்டுப்படுத்த நலாம் பெறுக ஐயா நாசுக்காக மேற்கொண்ட சமாதான முயற்சியாக இருக்க வேண்டும் என்றே தோன்றியது. பாஸ்கரை மகனாகவோ தம்பியாகவோ நினைத்து தாலாட்டு எழுதச் சொல்லி வேண்டுகோள் முன் வைத்துவிட்டார். :):) முரண்பாடான கருத்துகளுடன் முட்டி மோதத் தொடங்கிய இருவருக்குள் இப்படி ஒரு பந்தத்தை கற்பனை செய்யச் சொன்னதில் மூண்டெழுந்த ஆத்திரத்தையும், ஊற்றெடுத்த கருத்துகளையும் அப்படியே அமுக்கி வைக்க வேண்டியதாகிவிட்டது. என்னடா இது என்று தர்மசங்கடத்துக்குள்ளாகிவிட்டேன். திசை திரூப்பப்பட்டாலும் எனக்கு இந்த தாலாட்டு எழுதும் விசயம் மிகவும் பிடித்திருக்கிறது. அதனால் தொடர்ந்து இந்த தாலாட்டு எழுதும் முயற்சியை குழுமத்தில் தொடக்கலாம் என்று இருக்கிறேன். அதன் முயற்சியில் பாஸ்கரை தம்பி பாப்பாவாக பாவித்து எழுதிய தாலாட்டு இது...... :):)

ஆராரோ ஆரிரரோ அருமைத் தம்பி கண்ணுறங்கு!
ஊருறங்கும் நேரமிது ஓவென்று நீரழலாமோ?
பாலுண்டீர், பழமுண்டீர்; பசியாறித் தூங்காமல்
ஏனழுதீர் எந்தம்பி? எதைக் கண்டு நீர் அருண்டீர்?

(ஆராரோ ஆரீரரோ)

கண்ணாடி முன்னின்றீரோ?கருமை முகம் தான் கண்டீரோ?
கண்ணுறங்க முடியாமல் கவலையினால் நீரழுதீரோ?
கண்ணெடுத்துப் பார்ப்பாரோ கன்னிமயில்கள் தானென்று
கண்மணியே கலங்காதீர் கருமை நிறம் நீரென்று

(ஆராரோ ஆரீரரோ)

கண்ணெடுத்துப் பார்ப்பாரோ காதலிக்க தானென்று
கண்மணியே கலங்காதீர் கருமை நிறம் நீரென்று
காக்கும் கடவுளும் கறுப்புதாண்டா..கண்மனியே கண்ணுறங்கு!
சூப்பர் ஸ்டாரும் கறுப்புதாண்டா; சுந்தரனே கண்ணுறங்கு!

(ஆராரோ ஆரீரரோ)

விரசாய் வளரணுமே வரவாய் உழைக்கணுமே
நிறைவாய் நகை நட்டு நீர் பூட்டனுமே அக்கைக்கு
பெரிசாய் பயந்தனையோ பேயலறல் அழுதனையோ
தரிசாய் போகுமென்று தங்கமே கலங்கினையோ?

(ஆராரோ ஆரீரரோ)

கடல் கடந்து போகணுமே காசு பணம் சேர்க்கணுமே
முழுசாக இளமையெல்லாம் விழலாக போகணுமோ
என்றுணர்ந்தா நீரழுதீர் என் தம்பி சொல்லியழும்
நன்றாக வாழ்கை வரும் கண்ணுறங்கு கண்மணியே!

(ஆராரோ ஆரீரரோ)

பெண் சோதரம் உடன் பிறப்பாய் பிறந்திட்ட விதி நினைந்து
வெஞ்சினமாய் வெகுண்டீரோ வெந்நீராய் விழி திறந்தீரோ?
கண்ணீரை துடையுமய்யா; கவலை தனை தவிருமைய்யா- அக்கா
கூடவர மாமனிருக்கார்; காதல் மட்டும் போதுமென்பார்

(ஆராரோ ஆரீரரோ)

Friday, July 18, 2008

தமிழ் பிரவாகத்தின் இலக்கியப் போட்டிகள் - 2008ன் முடிவுகள்.

மரபுக் கவிதைப் பிரிவு
புதுக்கவிதைப் பிரிவு.
கட்டுரைப் பிரிவு.
சிறுகதைப் பிரிவு.
நகைச் சுவைத் துணுக்கு

ஆகிய பிரிவுகளில் நடத்தப்பட்டது.

முதற்கண் போட்டியில் பங்கு பற்றிய அத்தனை படைப்பாளிகளுக்கும் நமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகுக. எமது அன்பான வேண்டுகோளுக்கிணங்க சிரமம் பாராமல் நடுவர்களாகப் பணியாற்றிய மத்தியஸ்தர பெருமக்களுக்கும் நமது மனமார்ந்த நன்றிகள் பல பல............!!!!!!!



மரபுக்கவிதை பிரிவில் முதலாம் பரிசு யாருக்கும் வழங்கப்படவில்லை. இப்போட்டிப் பிரிவில் நடுவராக கடமையாற்றியவர் பெருமதிப்புக்குரிய திருவாளர். வி.சுப்ரமணியம் அவர்கள்.
முதலாம் பரிசுக்கு யாரையும் தகுதியூடையவராக நடுவர் தேர்வு செய்யாததால் இரண்டாம் பரிசு "தசாவதாரம் " என்ற மரபுக் கவிதையை எழுதிய திரு.எஸ்.ராஜரிஷி அவர்களுக்கு 1000.00 ரூபா பணமும், 1000.00 பெறுமதியான புத்தகங்கள் வாங்கக் கூடிய பாரதி பதிப்பகத்தாரின் பரிசுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.

புதுக்கவிதைப் பிரிவில் நடுவராக கடமையாற்றியவர் பெரு மதிப்புக்குரிய திரு ஆஸிப் மீரான் அவர்கள். அவருடைய தேர்வின் படி
முதலாம் பரிசு - "ஒரு பனைமரத்தின் கீழே " என்ற கவிதையை அனுப்பிய திரு.ஆர்.நாகப்பன் அவர்களுக்கு.1500.00 ரூபா பணமும், 1500.00 பெறுமதியான புத்தகங்கள் வாங்கக் கூடிய பாரதி பதிப்பகத்தாரின் பரிசுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.
இரண்டாம் பரிசு - "காத்திருப்பின் வலிகள்" - என்ற கவிதையை அனுப்பிய திரு கோகுலன். (நமது தமிழ் பிரவாகம் குழுமத்தைச் சேர்ந்தவர்.) அவர்களுக்கு 1000.00 பணமும் 1000.00 பெறுமதியான புத்தகங்கள் வாங்கக் கூடிய பாரதி பதிப்பகத்தாரின் பரிசுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.

அத்துடன் புதுக் கவிதைப் பிரிவில் நடுவரான திரு.ஆஸிப் மீரான் அவர்கள் இரு சிறப்புப் பரிசுகளை தனது சார்பில் அறிவித்திருக்கிறார். திரு ஆஸிப் மீரான் அவர்கள் வழங்கும் இரு சிறப்புப் பரிசுகளுக்கு உரியவர்கள் :
"இங்கு வாழ்கை வாங்க (விற்க)ப்படும்" என்ற புதுக் கவிதையை அனுப்பிய திரு.சீனிவாசன் ஆளவந்தார் அவர்களுக்கு 500.00 பெறுமதியான புத்தகங்கள் வாங்கக் கூடிய பாரதி பதிப்பகத்தாரின் பரிசுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.
"உன் கடந்த காலத்தை உயிர் பெறச் செய்"என்ற புதுக் கவிதையை அனுப்பிய திரு. ரஞ்சித்ப்ரீத்தன் அவர்களுக்கு பெறுமதியான புத்தகங்கள் வாங்கக் கூடிய பாரதி பதிப்பகத்தாரின் பரிசுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.

கட்டுரைப் போட்டிப் பிரிவில் நடுவர்களாக கடமையாற்றியவர்கள் அன்புக்குரிய திருமதி கீதா சாம்பசிவம் அம்மையாரும், மரியாதைக்குரிய பண்டிதர். திரு.வை.சண்முகராஜா அவர்களுமாவர். இப்பிரிவில் நடுவர்களின் மதிப்பீடுகளின் படி
சிங்கப்பூரைச் சேர்ந்த திரு.ஜோதி பாரதி இராமலிங்கம் அவர்கள் எழுதிய "ஈழத் தமிழரும் இந்திய அரசியலும்" என்ற கட்டுரை அதிக மதிப்பெண்களைப் பெற்று முதல் பரிசுக்கு தேர்வாகிறது. திரு ஜோதி பாரதி இராமலிங்கம் அவர்களுக்கு 2500.00 பணமும் 2500.00 பெறுமதியான புத்தகங்கள் வாங்கக் கூடிய பாரதி பதிப்பகத்தாரின் பரிசுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.
திரு .கோகுலன் அவர்கள் எழுதிய "பெண்ணியம்" கட்டுரையும், திருமதி விசாலம் ராமன் எழுதிய "இன்றைய சூழ்நிலையில் பணத்தின் ஆதிக்கத்தில் பாசம் மறைந்துவிட்டதா? இல்லையா?" என்ற இரு கட்டுரைகளும் சமமான மதிப்பெண்களைப் பெற்றிருப்பதால் இரண்டாம் பரிசு இருவருக்கும் உரியதாகின்றது. (பரிசுத் தொகை இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.) இவர்கள் இருவருக்கும் தலா 625.00 ரூபா பணமும் 625.00 பெறுமதியான புத்தகங்கள் வாங்கக் கூடிய பாரதி பதிப்பகத்தாரின் பரிசுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.
சிறுகதைப் போட்டிப் பிரிவில் நடுவர்களாக கடமையாற்றியவர்கள் பிரபல எழுத்தாளாரான மதிப்புகுரிய திருவாளார். சுப்பிர பாரதி மணியன் . சிநேகத்துக்குரிய படைப்பாளி திருவாளர் ரசிகவ் ஞானியார், அன்புக்குரிய ஈழத்துப் படைப்பாளி செல்வி மாதுமை சிவசுப்ரமணியம் அவர்களுமாவார்கள். நடுவர்கள் மூவரின் மதிப்பீடுகளின்படி
திரு ஆதவா சூர்யா அவர்கள் எழுதிய "ஏனெனத் தெரியாத கணங்கள்"
என்ற சிறுகதை அதிக மதிப்பெண்களைப் பெற்று முதல் பரிசுக்கு தேர்வாகிறது. திரு ஆதவா சூர்யா அவர்களுக்கு 2500.00 ரூபா பணமும் 2500.00 பெறுமதியான புத்தகங்கள் வாங்கக் கூடிய பாரதி பதிப்பகத்தாரின் பரிசுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.
திரு .சுப்பு ராஜ் அவர்கள் எழுதிய "அங்கு மட்டுமா அந்த சுவர்? " என்ற சிறுகதையும், திருமதி சந்திரவதனா செல்வகுமாரன் அவர்கள் எழுதிய "பூத்த கொடி பூக்களின்றி" என்ற சிறுகதையும் சமமான மதிப்பெண்களைப் பெற்றிருப்பதால் இரண்டாம் பரிசு இருவருக்கும் உரியதாகின்றது. (பரிசுத் தொகை இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.) ஆகவே இருவருக்கும் தலா 625.00 ரூபா பணமும் 625.00 பெறுமதியான புத்தகங்கள் வாங்கக் கூடிய பாரதி பதிப்பகத்தாரின் பரிசுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.

நகைச்சுவைத் துணுக்குப் போட்டியில் போதிய அளவில் போட்டியாளர்கள் பங்களிப்பு தராததால் பரிசு யாருக்கும் வழங்கப்படவில்லை.

நன்றி! வணக்கம்!