Thursday, September 11, 2008

தாலாட்டு பாட வா!

தாலாட்டு பாட வா!


இப்படி ஒரு முயற்சிக்கு வித்திட்டவர் முத்தமிழ் குழுமத்தின் உறுப்பினரான நலம் பெறுக ஐயா தான். ஆண்மகனுக்கோர் கவிதை என்ற இழையில் எனக்கும் பாஸ்கர் என்ற பதிவருக்குமிடையில் உருவாகவிருந்த ஒரு கடுமையான பெண்ணியம் பற்றிய விவாதத்தை மட்டுப்படுத்த நலாம் பெறுக ஐயா நாசுக்காக மேற்கொண்ட சமாதான முயற்சியாக இருக்க வேண்டும் என்றே தோன்றியது. பாஸ்கரை மகனாகவோ தம்பியாகவோ நினைத்து தாலாட்டு எழுதச் சொல்லி வேண்டுகோள் முன் வைத்துவிட்டார். :):) முரண்பாடான கருத்துகளுடன் முட்டி மோதத் தொடங்கிய இருவருக்குள் இப்படி ஒரு பந்தத்தை கற்பனை செய்யச் சொன்னதில் மூண்டெழுந்த ஆத்திரத்தையும், ஊற்றெடுத்த கருத்துகளையும் அப்படியே அமுக்கி வைக்க வேண்டியதாகிவிட்டது. என்னடா இது என்று தர்மசங்கடத்துக்குள்ளாகிவிட்டேன். திசை திரூப்பப்பட்டாலும் எனக்கு இந்த தாலாட்டு எழுதும் விசயம் மிகவும் பிடித்திருக்கிறது. அதனால் தொடர்ந்து இந்த தாலாட்டு எழுதும் முயற்சியை குழுமத்தில் தொடக்கலாம் என்று இருக்கிறேன். அதன் முயற்சியில் பாஸ்கரை தம்பி பாப்பாவாக பாவித்து எழுதிய தாலாட்டு இது...... :):)

ஆராரோ ஆரிரரோ அருமைத் தம்பி கண்ணுறங்கு!
ஊருறங்கும் நேரமிது ஓவென்று நீரழலாமோ?
பாலுண்டீர், பழமுண்டீர்; பசியாறித் தூங்காமல்
ஏனழுதீர் எந்தம்பி? எதைக் கண்டு நீர் அருண்டீர்?

(ஆராரோ ஆரீரரோ)

கண்ணாடி முன்னின்றீரோ?கருமை முகம் தான் கண்டீரோ?
கண்ணுறங்க முடியாமல் கவலையினால் நீரழுதீரோ?
கண்ணெடுத்துப் பார்ப்பாரோ கன்னிமயில்கள் தானென்று
கண்மணியே கலங்காதீர் கருமை நிறம் நீரென்று

(ஆராரோ ஆரீரரோ)

கண்ணெடுத்துப் பார்ப்பாரோ காதலிக்க தானென்று
கண்மணியே கலங்காதீர் கருமை நிறம் நீரென்று
காக்கும் கடவுளும் கறுப்புதாண்டா..கண்மனியே கண்ணுறங்கு!
சூப்பர் ஸ்டாரும் கறுப்புதாண்டா; சுந்தரனே கண்ணுறங்கு!

(ஆராரோ ஆரீரரோ)

விரசாய் வளரணுமே வரவாய் உழைக்கணுமே
நிறைவாய் நகை நட்டு நீர் பூட்டனுமே அக்கைக்கு
பெரிசாய் பயந்தனையோ பேயலறல் அழுதனையோ
தரிசாய் போகுமென்று தங்கமே கலங்கினையோ?

(ஆராரோ ஆரீரரோ)

கடல் கடந்து போகணுமே காசு பணம் சேர்க்கணுமே
முழுசாக இளமையெல்லாம் விழலாக போகணுமோ
என்றுணர்ந்தா நீரழுதீர் என் தம்பி சொல்லியழும்
நன்றாக வாழ்கை வரும் கண்ணுறங்கு கண்மணியே!

(ஆராரோ ஆரீரரோ)

பெண் சோதரம் உடன் பிறப்பாய் பிறந்திட்ட விதி நினைந்து
வெஞ்சினமாய் வெகுண்டீரோ வெந்நீராய் விழி திறந்தீரோ?
கண்ணீரை துடையுமய்யா; கவலை தனை தவிருமைய்யா- அக்கா
கூடவர மாமனிருக்கார்; காதல் மட்டும் போதுமென்பார்

(ஆராரோ ஆரீரரோ)

Friday, July 18, 2008

தமிழ் பிரவாகத்தின் இலக்கியப் போட்டிகள் - 2008ன் முடிவுகள்.

மரபுக் கவிதைப் பிரிவு
புதுக்கவிதைப் பிரிவு.
கட்டுரைப் பிரிவு.
சிறுகதைப் பிரிவு.
நகைச் சுவைத் துணுக்கு

ஆகிய பிரிவுகளில் நடத்தப்பட்டது.

முதற்கண் போட்டியில் பங்கு பற்றிய அத்தனை படைப்பாளிகளுக்கும் நமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகுக. எமது அன்பான வேண்டுகோளுக்கிணங்க சிரமம் பாராமல் நடுவர்களாகப் பணியாற்றிய மத்தியஸ்தர பெருமக்களுக்கும் நமது மனமார்ந்த நன்றிகள் பல பல............!!!!!!!



மரபுக்கவிதை பிரிவில் முதலாம் பரிசு யாருக்கும் வழங்கப்படவில்லை. இப்போட்டிப் பிரிவில் நடுவராக கடமையாற்றியவர் பெருமதிப்புக்குரிய திருவாளர். வி.சுப்ரமணியம் அவர்கள்.
முதலாம் பரிசுக்கு யாரையும் தகுதியூடையவராக நடுவர் தேர்வு செய்யாததால் இரண்டாம் பரிசு "தசாவதாரம் " என்ற மரபுக் கவிதையை எழுதிய திரு.எஸ்.ராஜரிஷி அவர்களுக்கு 1000.00 ரூபா பணமும், 1000.00 பெறுமதியான புத்தகங்கள் வாங்கக் கூடிய பாரதி பதிப்பகத்தாரின் பரிசுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.

புதுக்கவிதைப் பிரிவில் நடுவராக கடமையாற்றியவர் பெரு மதிப்புக்குரிய திரு ஆஸிப் மீரான் அவர்கள். அவருடைய தேர்வின் படி
முதலாம் பரிசு - "ஒரு பனைமரத்தின் கீழே " என்ற கவிதையை அனுப்பிய திரு.ஆர்.நாகப்பன் அவர்களுக்கு.1500.00 ரூபா பணமும், 1500.00 பெறுமதியான புத்தகங்கள் வாங்கக் கூடிய பாரதி பதிப்பகத்தாரின் பரிசுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.
இரண்டாம் பரிசு - "காத்திருப்பின் வலிகள்" - என்ற கவிதையை அனுப்பிய திரு கோகுலன். (நமது தமிழ் பிரவாகம் குழுமத்தைச் சேர்ந்தவர்.) அவர்களுக்கு 1000.00 பணமும் 1000.00 பெறுமதியான புத்தகங்கள் வாங்கக் கூடிய பாரதி பதிப்பகத்தாரின் பரிசுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.

அத்துடன் புதுக் கவிதைப் பிரிவில் நடுவரான திரு.ஆஸிப் மீரான் அவர்கள் இரு சிறப்புப் பரிசுகளை தனது சார்பில் அறிவித்திருக்கிறார். திரு ஆஸிப் மீரான் அவர்கள் வழங்கும் இரு சிறப்புப் பரிசுகளுக்கு உரியவர்கள் :
"இங்கு வாழ்கை வாங்க (விற்க)ப்படும்" என்ற புதுக் கவிதையை அனுப்பிய திரு.சீனிவாசன் ஆளவந்தார் அவர்களுக்கு 500.00 பெறுமதியான புத்தகங்கள் வாங்கக் கூடிய பாரதி பதிப்பகத்தாரின் பரிசுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.
"உன் கடந்த காலத்தை உயிர் பெறச் செய்"என்ற புதுக் கவிதையை அனுப்பிய திரு. ரஞ்சித்ப்ரீத்தன் அவர்களுக்கு பெறுமதியான புத்தகங்கள் வாங்கக் கூடிய பாரதி பதிப்பகத்தாரின் பரிசுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.

கட்டுரைப் போட்டிப் பிரிவில் நடுவர்களாக கடமையாற்றியவர்கள் அன்புக்குரிய திருமதி கீதா சாம்பசிவம் அம்மையாரும், மரியாதைக்குரிய பண்டிதர். திரு.வை.சண்முகராஜா அவர்களுமாவர். இப்பிரிவில் நடுவர்களின் மதிப்பீடுகளின் படி
சிங்கப்பூரைச் சேர்ந்த திரு.ஜோதி பாரதி இராமலிங்கம் அவர்கள் எழுதிய "ஈழத் தமிழரும் இந்திய அரசியலும்" என்ற கட்டுரை அதிக மதிப்பெண்களைப் பெற்று முதல் பரிசுக்கு தேர்வாகிறது. திரு ஜோதி பாரதி இராமலிங்கம் அவர்களுக்கு 2500.00 பணமும் 2500.00 பெறுமதியான புத்தகங்கள் வாங்கக் கூடிய பாரதி பதிப்பகத்தாரின் பரிசுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.
திரு .கோகுலன் அவர்கள் எழுதிய "பெண்ணியம்" கட்டுரையும், திருமதி விசாலம் ராமன் எழுதிய "இன்றைய சூழ்நிலையில் பணத்தின் ஆதிக்கத்தில் பாசம் மறைந்துவிட்டதா? இல்லையா?" என்ற இரு கட்டுரைகளும் சமமான மதிப்பெண்களைப் பெற்றிருப்பதால் இரண்டாம் பரிசு இருவருக்கும் உரியதாகின்றது. (பரிசுத் தொகை இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.) இவர்கள் இருவருக்கும் தலா 625.00 ரூபா பணமும் 625.00 பெறுமதியான புத்தகங்கள் வாங்கக் கூடிய பாரதி பதிப்பகத்தாரின் பரிசுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.
சிறுகதைப் போட்டிப் பிரிவில் நடுவர்களாக கடமையாற்றியவர்கள் பிரபல எழுத்தாளாரான மதிப்புகுரிய திருவாளார். சுப்பிர பாரதி மணியன் . சிநேகத்துக்குரிய படைப்பாளி திருவாளர் ரசிகவ் ஞானியார், அன்புக்குரிய ஈழத்துப் படைப்பாளி செல்வி மாதுமை சிவசுப்ரமணியம் அவர்களுமாவார்கள். நடுவர்கள் மூவரின் மதிப்பீடுகளின்படி
திரு ஆதவா சூர்யா அவர்கள் எழுதிய "ஏனெனத் தெரியாத கணங்கள்"
என்ற சிறுகதை அதிக மதிப்பெண்களைப் பெற்று முதல் பரிசுக்கு தேர்வாகிறது. திரு ஆதவா சூர்யா அவர்களுக்கு 2500.00 ரூபா பணமும் 2500.00 பெறுமதியான புத்தகங்கள் வாங்கக் கூடிய பாரதி பதிப்பகத்தாரின் பரிசுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.
திரு .சுப்பு ராஜ் அவர்கள் எழுதிய "அங்கு மட்டுமா அந்த சுவர்? " என்ற சிறுகதையும், திருமதி சந்திரவதனா செல்வகுமாரன் அவர்கள் எழுதிய "பூத்த கொடி பூக்களின்றி" என்ற சிறுகதையும் சமமான மதிப்பெண்களைப் பெற்றிருப்பதால் இரண்டாம் பரிசு இருவருக்கும் உரியதாகின்றது. (பரிசுத் தொகை இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.) ஆகவே இருவருக்கும் தலா 625.00 ரூபா பணமும் 625.00 பெறுமதியான புத்தகங்கள் வாங்கக் கூடிய பாரதி பதிப்பகத்தாரின் பரிசுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.

நகைச்சுவைத் துணுக்குப் போட்டியில் போதிய அளவில் போட்டியாளர்கள் பங்களிப்பு தராததால் பரிசு யாருக்கும் வழங்கப்படவில்லை.

நன்றி! வணக்கம்!

Thursday, April 3, 2008

தமிழ் பிரவாகம் நடத்தும் இலக்கியப் போட்டிகள். - 2008.

அன்புடன் நண்பர்களுக்கு!

வணக்கம்!

ஆங்கில மொழியின் ஆதிக்கத்தில் இருந்த இணையத் தளத்தில் தமிழ் மொழியின்
பங்களிப்பை பெருக்குவதில் தமிழ் குழுமங்கள் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன என்றால் மிகையாகாது. தமிழ் மொழியை சுவாசிக்கும் அத்தனை இதயங்களுக்கும் இக் குழுமங்கள் இலக்கியத்தையும் , இலக்கணத்தையும், வரலாற்றையும், அன்றாட உலக நடப்புகளையும் அலசும் கருத்துக் களமாக விளங்குவதோடு நல்ல பல நட்புகளையும் வழங்கி இருக்கின்றது.

இலைமறை காயாக இருக்கும் பல படைப்பாளிகளை வெளிச்சத்துக்கு
கொண்டு வர இணையத் தளமும் , வலைப்பூக்களும் , தமிழ் குழுமங்களும் பெரிதும் உதவி வருவது ஆத்ம திருப்தியை தரும் விசயமாக இருந்து வருகிறது. இத்தனை பெருவெள்ளமாக இலக்கியப் பெருக்கும், கருத்துக் களமுமாக தமிழ் குழுமங்கள் வளர்ந்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் அதில் ஒரு துளியாக, சிறு தளமாக எமது தமிழ் பிரவாகம் உருவாகி வருவது குறித்து நாம் மிகவும் பெருமையடைகின்றோம்.

தமிழ் பிரவாகத்தின் அன்புக்குரிய உறுப்பினர்களுக்கும் , எமது குழுமத்தின்
வளர்சியிலும் நலனிலும் அக்கறை கொண்டு பின் புலத்தில் எமக்கு ஆதரவாகவும
உறுதுணையாகவும் இருந்து வரும் நல் இதயங்களுக்கும் இந்த வேளையில் எமது மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவிக்க விழைகிறோம்.

வரும் மே மாதம் 1ம் திகதி தனது முதலாம் ஆண்டு பூர்த்தியை தமிழ் பிரவாகம் மிகச் சிறப்பாக கொண்டாடும் இலக்குடன் வலை உலகில் இலக்கிய ஆர்வத்துடன் இருக்கும் சகலரும் பங்கேற்கும் வண்ணம் இலக்கியப் போட்டிகளை நடத்த திட்டமுள்ளது.

போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கான பரிசுகள் வரும் ஜூலை மாதம் நடை
பெறவிருக்கும் முத்தமிழ்- பிரவாக நண்பர்களின் சந்திப்பில் வழங்கப் படும்.

போட்டிகளின் விபரங்கள் வருமாறு:

இலக்கியப் போட்டிகள்

  1. சிறுகதை
  2. கவிதை
  3. கட்டுரை
  4. நகைச்சுவை துணுக்கு ஆகிய பிரிவுகளில் நடாத்தப்படும்.
  • ஒருவர் எத்தனை போட்டிகளிலும் பங்கு பெறலாம். ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் ஒரு ஆக்கம் மட்டுமே அனுப்பலாம்.
  • ஒவ்வொரு ஆக்கமும் உங்கள் *சொந்தக் கற்பனையில்* படைக்கப்பட்டதாய் இருக்க வேண்டும்;
  • வேறெந்த ஊடகங்களிலும் பிரசுரமாகாத படைப்புகளாக இருக்க வேண்டும்.
  • மொழிபெயர்ப்பு படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா.
  • *ஆபாசம் அல்லது தனி மனிதக் கீறல் இருப்பதாகக் கருதப்படும் எந்த ஆக்கமும் போட்டியிலிருந்து நீக்கப்படும் அதிகாரம் நடுவர்களுக்கு வழங்கப்படும்.*
  • போட்டிகளுக்கான ஆக்கங்கள் நம்மை வந்தடைய வேண்டிய கடைசி திகதி *2008 ம் ஆண்டு மே 31ம் திகதி*.

சிறுகதை & கட்டுரை போட்டிகளின் பரிசு விபரங்கள்:

  • - 1வது பரிசு - 2500.00 பெறுமதியான புத்தகங்களும், 2500.00 இந்திய
ரூபாயும் வழங்கப்படும்.
  • 2 வது பரிசு- 1250.00 பெறுமதியான புத்தகங்களும் 1250.00 இந்திய

ரூபாயும் வழங்கப்படும்.

  • பரிசு பெறும் ஒவ்வொரு ஆக்கமும் தமிழ் பிரவாகத்தின் முதலாம் ஆண்டு மலரிலும், குழுமத்திலும் பிரசுரமாகும். மற்றைய ஆக்கங்கள் தமிழ் பிரவாகக் குழுமத்தில்பிரசுரமாகும்.

சிறுகதை:


  • ஆபாசம் , தனி மனித கீறல் போன்ற கசடுகள் அற்ற நாகரீகமான , இயல்பான ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம்.
  • எத்தகைய கருவையும் பின்னணியாகக் கொண்டு கதை புனையப்படலாம்.
  • ஒருவர் ஒரு சிறுகதை ஆக்கம் மட்டுமே அனுப்பலாம்.
  • சிறுகதை 7 பக்கங்களிலிருந்து 10 பக்கங்களுக்குள் இருக்க வேண்டும். (A4 அளவு தாள்களே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது)
  • நடுவர்களின் முடிவே இறுதியானது.

கட்டுரை:

  • ஆபாசம் , தனி மனித கீறல் போன்ற கசடுகள் அற்ற நாகரீகமான , இயல்பான ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம்.
  • கட்டுரைகள் இங்கு தரப்பட்டிருக்கும் தலைப்புகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து ஒருவர் ஒரு கட்டுரை மட்டும் எழுதலாம்.
  • ஒவ்வொரு கட்டுரையும் 1000 சொற்களுக்கு மேற்படாதவையாக இருக்க வேண்டும்.


கட்டுரைகளுக்கான தலைப்புகள் :
  1. பெண்ணியம்.
  2. உலக அரங்கில் புலம் பெயர்ந்த தமிழர்களின் இன்றைய நிலை.
  3. தமிழ் கலாச்சாரமும் , இந்துசமயத்தின் ஆதிக்கமும்.
  4. உலக அரங்கில் இந்தியா வல்லரசாகக் கணிக்கப்டுகிறாதா இல்லையா?
  5. ஈழத்தமிழரும் , இந்திய அரசியலும்.
  6. அரசியலில் பொது மக்களின் பங்கு.
  7. இன்றைய இளைஞர்களின் வளர்ச்சி ஆக்கபூர்வமான பாதை நோக்கியா? அழிவுப்பாதையை நோக்கியா?
  8. இன்றைய சூழ்நிலையில் பணத்தின் ஆதிக்கத்தில் பாசம் மறைந்துவிட்டதா? இல்லையா?'
  9. மெல்லத் தமிழினி....வாழும்?வீழும்?
  10. கடவுள் பக்தியா , சுய கட்டுப்பாடா மனிதனை செம்மைப்படுத்தவல்லது?
  11. தியானம் என்பது....!


நகைச்சுவைத் துணுக்கு:

  • ஆபாசம் , தனி மனித கீறல் போன்ற கசடுகள் அற்ற நாகரீகமான , இயல்பான ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம்.
  • ஒருவர் ஆகக் குறைந்தது ஐந்து துணுக்குகளை ஒரே தாளில் அனுப்பலாம். ஆனால் சிறந்த துணுக்காக 3 துணுக்குகளே தேர்வு செய்யப்படும்.
  • ஒவ்வொரு துணுக்கும் பரிசாக தலா 500.00 இந்திய ரூபாய்கள் வழங்கப்படும்.


கவிதை:

கவிதைப் போட்டி 2 பிரிவுகளில் நடத்தப்படும்.

1. மரபுக் கவிதை.
2. புதுக்கவிதை

ஒவ்வொரு பிரிவிலும்

  • ஆபாசம் , தனி மனித கீறல் போன்ற கசடுகள் அற்ற நாகரீகமான , இயல்பான ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம்.
  • இரண்டு பக்கங்களுக்குள் கவிதை இருக்க வேண்டும். (A4 அளவு தாள்களே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது)
  • 1வது பரிசு 1500.00 ரூபா பெறுமதியான புத்தகங்களும் 1500.00 இந்திய ரூபாயும் வழங்கப்படும்.
  • 2வது பரிசு 1000.00 ரூபா பெறுமதியான புத்தகங்களும் 1000 .00இந்திய ரூபாயும் வழங்கப்படும்.

தமிழ் பிரவாகத்தின் முதலாம் ஆண்டு இலக்கியப் போட்டியில் யாரும் கலந்து
கொள்ளலாம். பரிசு பெறும் ஆக்கங்கள் ஆண்டு மலரிலும் , தமிழ் பிரவாகக்
குழுமத்திலும் பிரசுரிக்கப்படும். மற்றைய ஆக்கங்கள் தமிழ் பிரவாகக் குழுமத்து
இழைகளாகப் பிரசுரிக்கப்பட்டு உறுப்பினர்களின் கருத்துப் பகிர்வுகளுக்கு
சமர்பிக்கப்படும்.

எந்தவொரு ஆக்கமும் தனிமடலில் *Thamizmakal@gmail.com *என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படவேண்டும். போட்டி சம்மந்தமான மேலதிக விபரங்களுக்கும் இதே மின்னஞ்சல் மூலமே தொடர்பு கொள்ளவும். Subject பகுதியில் தமிழ் பிரவாகத்தின் முதலாம் ஆண்டு இலக்கியப் போட்டிகள்- 2008 என்று குறிப்பிடவும்.

இணையத் தளத்தில் எழுதிவரும் அத்தனை அன்புள்ளங்களும் இவ் அறிவித்தலை ஏற்று பங்குபெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுவதோடு ஆர்வமுள்ள படைப்பாளிகள் , இணையத்தள அனுபவமில்லாத ஆனால் எழுத்துத் திறமையுடைய உங்கள் நண்பர்களுக்கும் தெரிவிக்குமாறும் பணிவன்புடன் வேண்டுகின்றோம்.

படைப்புகள் கட்டாயமாக யுனிகோடு முறையிலான ஈ-கலப்பை
தமிழ் உருவிலே தட்டச்சுப் பெற்றிருக்க வேண்டும் என்பது மிக
முக்கியம்.

இந்த இலக்கியப் போட்டிகளை அனைவரும் அறிந்துகொள்ள உதவியாக குழும
உறுப்பினர்களும், நண்பர்களும் இவ் இலக்கியப் போட்டி அறிவித்தலை தத்தமது
வலைப்பூக்களிலும் , வலைத்தளத்திலும் பிரசுரிக்குமாறு அன்புடன் கேட்டுக்
கொள்ளப்படுகின்றனர்.
நன்றி !
வணக்கம்!!

Monday, March 3, 2008

சந்தேகம்

நிலவிலிருக்கும் கறையாக
ஏதோ ஒன்று
உன் பார்வையில்,
என்னைத் துன்புறுத்தி
எதையோ தேட முயல்கிறது
எனக்குள்ளே துழாவி..!

அழகிய வர்ணங்களால்
வரையப்பட்ட ஓவியம்,
ஆனாலு
பிசாசுகளின் கோரத்தாண்டவ சித்தரிப்பாக
ரசிக்க முடியாத சங்கடம்!

அழகிய பூவின் இதழ்களை
காற்றில் சருகுகளாய்
பிய்தெறிந்த
கொடூரமான கூரிய நகங்களில்
நாசூக்கான நகப்பூச்சு
அலங்காரமாய் தெரியவில்லை!

நிஜத்தின் பிம்மங்களை
பேதமைப் படுத்திய
உன் கண்ணாடி அரியத்தின் கீழ்
என் அன்பை பஞ்சாக எரிக்கும்
சூரியக் கதிரின்
தெறிப்புகள்...!

கைதி.

மூளைக்குள் புதைக்கப்பட்ட
தனிமை உணர்வுகளின்
பொறிகளுக்குள் முடங்கிப் போன
நானும் என் சுயமுமாய்...
சொல்லப்படாத வார்த்தைகளின்
கைதி நான்!
மௌனமாயிருக்கும்
ஒவ்வொரு பொழுதும்
பேச வேண்டிய கட்டாயங்களை
உணரப்பட்ட போதும்
நான், என் இயலாமையோடு
மௌனித்திருக்கிறேன்,
எனக்கான
முட்படுக்கைகளை தயாரித்தபடி...!
குற்றவாளிக்கான சித்தரிப்புகளோடு
வாழ்கைப் போரில்
தோற்றுப் போன கைதி நான்!
பழி சுமத்தெவென்ற ஆயத்தங்களுடன்
கேள்விக் கணைகளோடு
எதிரில் நீ!
என்னை நியாயப்படுத்தெவென்ற
சாட்சியங்கள் புறந்தள்ளப்பட,
போர்த்திறன் முடங்கி
முடுக்கிவிட்ட பொம்மையாக
இப்போது இயங்க வேண்டிய
கட்டாயங்களுடன்...
உன் வழக்காடுமன்றத்தில்
எனக்கான நியாயங்கள்
உனக்கு எதுவுமில்லாமல் போனது
விந்தை!
எறிவதற்காக
நீ தேர்வு செய்த கற்களின்
கனமும்,
வீசப்படும் வேகமும், துரிதமும்
கணிக்கும் முன்
சாய்க்கப்படுகிறேன்...
சந்தப்பமளிக்கப்படாத நிரபராதி
என்ற
சொல்லப்படாத வார்த்தைகளுடன்..!
தப்பிவிட்ட முனைப்பில்
என்னைப் புறந்தள்ளி
நடக்கிறாய் அவசரமாய்..!
உன்னோடான
அந்த நாட்களின் சந்தோஷங்க்ள்
இன்றைய நிகழ்வில்
அகழப்பட்ட புதைகுழியில்
ஆழமாக புதைக்கப்பட
மூளைக்குள் திருத்திய உணர்வுகளைச் சுற்றி
உயரமாய் முட்கம்பி வேலிகளை
என்னை நானே
சிறைப்படுத்துகிறேன்...
இளமையைக் கரைக்கும் அவசரத்தில்
ஆயுளுடன் ஓடிக்கொண்டிருக்கிறேன்..
பழையன மறக்கும் முனைப்புகளுடன்
உன்னை துரத்தும்
விருப்பமின்றி....

Wednesday, February 13, 2008

நீ

ஏனிப்படி மாறினேன்?
உனைப் பார்த்த கணத்தில்
உயிர் சிதைந்து மண்டியிட்டேன்!
உடல் பற்றிய உருவமில்லா
தீயில்
மனக் கருகியதோ?
மருகியதோ?

என் கணத்தாக்கங்களை
ஸ்தம்பிக்க வைத்த
உயிர் கொல்லி!

பகலுக்காய் ஏங்கினேன்
உனைப் பார்க்க வேண்டி..
நேரத்துக்கு தூங்கினேன்
நீ வரும்
என் க்னவுகளுக்காண்டி..

மரணத்தை விட கொடிய நொடி
உன் பிரிவின் நாழி!
எரிமலையாய் தகிக்க
ஒரு துளி புன்னகையில்
உயிர் தந்து கொல்கிறாய்.
நீ!

காதல்

மானுடத்தின் சாபக்கேடா
அல்லது
விமோசனமா
என்று விடை கிடையாத
புதிர்!

உயிரின் பூகம்பத்துக்கு
ஊடகம் !
உணர்வுகளிலலூட்உருவும்
மின்னிறக்கம்!
உயிரோடு ஒரு வதை!
உயிரையும்
எரித்துவிடும் சிதை!

தூர இருந்து ரசித்த போது
ரோஜாவாய் சிரிக்கும்
அனுபவித்த பின் தான்
முள்ளாய் குற்றும்
பிரிவுகளால்..

யாதுமாகி நின்று
உருக்கொடுத்து எழுப்பும்;
சமயத்தில்
யாதுமற்றதாக்கி
உருக்குலைத்து அழிக்கும்

Monday, February 11, 2008

எனக்கான வதை..!

தேடலுடலான காத்திருப்புகளை
விதியாக தீர்ப்பு எழுதி வைத்து
காதல் என்ற வரம்
வதையாகத் தந்தவன்
நீ!

முந்திய மாலைப் பொழுதில்
தேன் முகிழ்த்த வண்டு
விலகிப் போன பாதை
பார்த்து
வாடிப் போன மலர்
மாலையாகவும் வழியில்லை
மணக்கவும் முடியவில்லை...

உன் தோள் சாய்ந்த பொழுதுகள்
காதலை ஒரு மைல் கல்லாக நினைத்தேன்..
உன்னைப் பாராத நாட்களில் தான்
உறைக்கிறது
அது வெறும் சுமைக் கல் என்று!

நீயில்லாத நேரங்களில்
வெறுமையாகிப் போன வாழ்கையை
எதை வைத்து நிரப்ப?
உன்னைத் தொடர்ந்து வருவது
உன் நிழல் என்று நினைக்காதே
கூடவே வருவது என் உயிர்.
பத்திரமாக
திருப்பி அனுப்பு...
அல்லது கல்லறையில் தான்
காத்திருக்கும்
என் காதல்!

ஏக்கங்கள் அரித்த மனது
புற்றாகிப் போக
பிரிவு என்ற சர்ப்பம்
அனாக் கொண்டாவாக அணைத்து
மூச்சடைக்க வைக்கிறது!

உன்னைப் பற்றிய
கனவுகளுக்காக ஏங்கிய கண்களுக்கு
தூங்கும் வழி தெரியவில்லை!
உன் நினைவுகள்
துயில் தடுக்கும் காரணிகளாக..

உயிர்த்திருக்க ஒரு காரணமாக
உன் காதல் மட்டும்
என்னுடன் வைத்திருக்க..
எரி நெருப்பில் சிதையாக
அதுவே
என்னை வதைப்பது
என்ன நியாயம்?

சலனமற்ற குளத்தில்
வலை வீசி மீன் பிடித்து
தரையில் விட்டாய்...
உயிரோடு துடிக்கும் வலியை
நீ ரசிப்பதற்காக என்றே
நானும் வலியை
என்னுடன் தக்க வைக்கிறேன்..

வெறும் காற்றே
சுவாசமாகவும், சுவையாகவும்
மொழி தெரியாத தீவில்
தனியாக நான்!
வாழ்கையின் பாதை
முன்னே நீளமாக
பயமுறுத்தும் எதிர்காலத்தில்
எனக்கென்று துணையாக
உன் காதலுடன் மட்டுமே
பயணிக்கிறேன்.....
தேடலுடனான காத்திருப்புகளில்
எழுதப்பட்ட விதியை
ஏற்று....!