Wednesday, February 13, 2008

நீ

ஏனிப்படி மாறினேன்?
உனைப் பார்த்த கணத்தில்
உயிர் சிதைந்து மண்டியிட்டேன்!
உடல் பற்றிய உருவமில்லா
தீயில்
மனக் கருகியதோ?
மருகியதோ?

என் கணத்தாக்கங்களை
ஸ்தம்பிக்க வைத்த
உயிர் கொல்லி!

பகலுக்காய் ஏங்கினேன்
உனைப் பார்க்க வேண்டி..
நேரத்துக்கு தூங்கினேன்
நீ வரும்
என் க்னவுகளுக்காண்டி..

மரணத்தை விட கொடிய நொடி
உன் பிரிவின் நாழி!
எரிமலையாய் தகிக்க
ஒரு துளி புன்னகையில்
உயிர் தந்து கொல்கிறாய்.
நீ!

காதல்

மானுடத்தின் சாபக்கேடா
அல்லது
விமோசனமா
என்று விடை கிடையாத
புதிர்!

உயிரின் பூகம்பத்துக்கு
ஊடகம் !
உணர்வுகளிலலூட்உருவும்
மின்னிறக்கம்!
உயிரோடு ஒரு வதை!
உயிரையும்
எரித்துவிடும் சிதை!

தூர இருந்து ரசித்த போது
ரோஜாவாய் சிரிக்கும்
அனுபவித்த பின் தான்
முள்ளாய் குற்றும்
பிரிவுகளால்..

யாதுமாகி நின்று
உருக்கொடுத்து எழுப்பும்;
சமயத்தில்
யாதுமற்றதாக்கி
உருக்குலைத்து அழிக்கும்

Monday, February 11, 2008

எனக்கான வதை..!

தேடலுடலான காத்திருப்புகளை
விதியாக தீர்ப்பு எழுதி வைத்து
காதல் என்ற வரம்
வதையாகத் தந்தவன்
நீ!

முந்திய மாலைப் பொழுதில்
தேன் முகிழ்த்த வண்டு
விலகிப் போன பாதை
பார்த்து
வாடிப் போன மலர்
மாலையாகவும் வழியில்லை
மணக்கவும் முடியவில்லை...

உன் தோள் சாய்ந்த பொழுதுகள்
காதலை ஒரு மைல் கல்லாக நினைத்தேன்..
உன்னைப் பாராத நாட்களில் தான்
உறைக்கிறது
அது வெறும் சுமைக் கல் என்று!

நீயில்லாத நேரங்களில்
வெறுமையாகிப் போன வாழ்கையை
எதை வைத்து நிரப்ப?
உன்னைத் தொடர்ந்து வருவது
உன் நிழல் என்று நினைக்காதே
கூடவே வருவது என் உயிர்.
பத்திரமாக
திருப்பி அனுப்பு...
அல்லது கல்லறையில் தான்
காத்திருக்கும்
என் காதல்!

ஏக்கங்கள் அரித்த மனது
புற்றாகிப் போக
பிரிவு என்ற சர்ப்பம்
அனாக் கொண்டாவாக அணைத்து
மூச்சடைக்க வைக்கிறது!

உன்னைப் பற்றிய
கனவுகளுக்காக ஏங்கிய கண்களுக்கு
தூங்கும் வழி தெரியவில்லை!
உன் நினைவுகள்
துயில் தடுக்கும் காரணிகளாக..

உயிர்த்திருக்க ஒரு காரணமாக
உன் காதல் மட்டும்
என்னுடன் வைத்திருக்க..
எரி நெருப்பில் சிதையாக
அதுவே
என்னை வதைப்பது
என்ன நியாயம்?

சலனமற்ற குளத்தில்
வலை வீசி மீன் பிடித்து
தரையில் விட்டாய்...
உயிரோடு துடிக்கும் வலியை
நீ ரசிப்பதற்காக என்றே
நானும் வலியை
என்னுடன் தக்க வைக்கிறேன்..

வெறும் காற்றே
சுவாசமாகவும், சுவையாகவும்
மொழி தெரியாத தீவில்
தனியாக நான்!
வாழ்கையின் பாதை
முன்னே நீளமாக
பயமுறுத்தும் எதிர்காலத்தில்
எனக்கென்று துணையாக
உன் காதலுடன் மட்டுமே
பயணிக்கிறேன்.....
தேடலுடனான காத்திருப்புகளில்
எழுதப்பட்ட விதியை
ஏற்று....!