Thursday, September 11, 2008

தாலாட்டு பாட வா!

தாலாட்டு பாட வா!


இப்படி ஒரு முயற்சிக்கு வித்திட்டவர் முத்தமிழ் குழுமத்தின் உறுப்பினரான நலம் பெறுக ஐயா தான். ஆண்மகனுக்கோர் கவிதை என்ற இழையில் எனக்கும் பாஸ்கர் என்ற பதிவருக்குமிடையில் உருவாகவிருந்த ஒரு கடுமையான பெண்ணியம் பற்றிய விவாதத்தை மட்டுப்படுத்த நலாம் பெறுக ஐயா நாசுக்காக மேற்கொண்ட சமாதான முயற்சியாக இருக்க வேண்டும் என்றே தோன்றியது. பாஸ்கரை மகனாகவோ தம்பியாகவோ நினைத்து தாலாட்டு எழுதச் சொல்லி வேண்டுகோள் முன் வைத்துவிட்டார். :):) முரண்பாடான கருத்துகளுடன் முட்டி மோதத் தொடங்கிய இருவருக்குள் இப்படி ஒரு பந்தத்தை கற்பனை செய்யச் சொன்னதில் மூண்டெழுந்த ஆத்திரத்தையும், ஊற்றெடுத்த கருத்துகளையும் அப்படியே அமுக்கி வைக்க வேண்டியதாகிவிட்டது. என்னடா இது என்று தர்மசங்கடத்துக்குள்ளாகிவிட்டேன். திசை திரூப்பப்பட்டாலும் எனக்கு இந்த தாலாட்டு எழுதும் விசயம் மிகவும் பிடித்திருக்கிறது. அதனால் தொடர்ந்து இந்த தாலாட்டு எழுதும் முயற்சியை குழுமத்தில் தொடக்கலாம் என்று இருக்கிறேன். அதன் முயற்சியில் பாஸ்கரை தம்பி பாப்பாவாக பாவித்து எழுதிய தாலாட்டு இது...... :):)

ஆராரோ ஆரிரரோ அருமைத் தம்பி கண்ணுறங்கு!
ஊருறங்கும் நேரமிது ஓவென்று நீரழலாமோ?
பாலுண்டீர், பழமுண்டீர்; பசியாறித் தூங்காமல்
ஏனழுதீர் எந்தம்பி? எதைக் கண்டு நீர் அருண்டீர்?

(ஆராரோ ஆரீரரோ)

கண்ணாடி முன்னின்றீரோ?கருமை முகம் தான் கண்டீரோ?
கண்ணுறங்க முடியாமல் கவலையினால் நீரழுதீரோ?
கண்ணெடுத்துப் பார்ப்பாரோ கன்னிமயில்கள் தானென்று
கண்மணியே கலங்காதீர் கருமை நிறம் நீரென்று

(ஆராரோ ஆரீரரோ)

கண்ணெடுத்துப் பார்ப்பாரோ காதலிக்க தானென்று
கண்மணியே கலங்காதீர் கருமை நிறம் நீரென்று
காக்கும் கடவுளும் கறுப்புதாண்டா..கண்மனியே கண்ணுறங்கு!
சூப்பர் ஸ்டாரும் கறுப்புதாண்டா; சுந்தரனே கண்ணுறங்கு!

(ஆராரோ ஆரீரரோ)

விரசாய் வளரணுமே வரவாய் உழைக்கணுமே
நிறைவாய் நகை நட்டு நீர் பூட்டனுமே அக்கைக்கு
பெரிசாய் பயந்தனையோ பேயலறல் அழுதனையோ
தரிசாய் போகுமென்று தங்கமே கலங்கினையோ?

(ஆராரோ ஆரீரரோ)

கடல் கடந்து போகணுமே காசு பணம் சேர்க்கணுமே
முழுசாக இளமையெல்லாம் விழலாக போகணுமோ
என்றுணர்ந்தா நீரழுதீர் என் தம்பி சொல்லியழும்
நன்றாக வாழ்கை வரும் கண்ணுறங்கு கண்மணியே!

(ஆராரோ ஆரீரரோ)

பெண் சோதரம் உடன் பிறப்பாய் பிறந்திட்ட விதி நினைந்து
வெஞ்சினமாய் வெகுண்டீரோ வெந்நீராய் விழி திறந்தீரோ?
கண்ணீரை துடையுமய்யா; கவலை தனை தவிருமைய்யா- அக்கா
கூடவர மாமனிருக்கார்; காதல் மட்டும் போதுமென்பார்

(ஆராரோ ஆரீரரோ)