Monday, July 23, 2007

விழிப்பு


விடியலே!
உன்னை என்னால் பார்க்க முடிகிறது.
ஏனெனில்
நான் விழித்துக் கொண்டேன்,

இனிமையும் பாதுகாப்பாயுமிருந்த
ஒரு பொழுது வாழ்கை
திடீரென்று பொய்யாகி வெளுத்துப் போன
தருணங்களின் பாதிப்பில்
வீழ்ந்துவிடாமல் சுதாகரித்து கொண்டபின்
உயரமாய் எழுந்து நின்று
விடியலுக்கான சூரியக் கதிர்களை மறைக்கும்
மேகத்தின் இருளை விலக்கிப் புறக்கணிக்கும்
அசுரபலத்துடன்
நான்
சமுத்திரத்தின் நீலத்திற்க்கும் கீழான
ஆழத்தையும் அமைதியையும் கொண்ட
பலமான இதயச் சுவர்களில்
ஒளிக்கற்றைகளை உள் வாங்கிப் பழகிய பின்
விடியலே
உன்னை என்னால் நன்றாகவே பார்க்கமுடிகின்றது..
ஏனெனில்
நான் விழித்துக் கொண்டேன்..!

கிழித்தெறிந்து துளைத்துவரும்
சூரியக் கதிர்கள்
இடைமறிக்கும் துயர் முகில்களை சாம்பலாக்கி
இன்னும் சற்று நேரத்தில் வெளிப்படும் போது
என் கண்களிலிருந்து கண்ணீர்க் கறைகள்
காய்ந்து போகும்.
என் இதயத்தினுள் பார்க்கின்றேன்..
என்னவொரு வெளிச்சம்?


ஏய்..!
என்னை வீழ்த்திவிட்டதாய் இறுமாந்தவனே!!
பார்..
நான் சாமர்த்திய சாலி...
இதயத்தினடியில் துயரங்களை புதைத்த
அஸ்திவாரத்தில் நிமிரும் கட்டிடங்களாக
சில இலட்சியங்களுடன்
இன்னொருமுறை வாழ்ந்து பார்க்க வேண்டிய
வாழ்கைக்கான ஒளி வாங்கிய
விழிப்புடன் விழித்துக் கொண்டேன்..

வாழ்கைச் சூதாட்டத்தின்
சீட்டுக்களை விளையாடக் கற்றுக் கொண்டபின்னால்
என் நேரங்களின் அருமையையும்
எனக்குள் விளைந்த அழகின் அருகதையையும்
உணராத..
என்னோடிருந்த பயங்களை உதறிய தருணங்களில்
விடியலே...
உன்னை என்னால் பார்க்கமுடிகின்றது,
ஏனெனில்
நான் விழித்துக் கொண்டுவிட்டேன்..!!