Monday, March 3, 2008

சந்தேகம்

நிலவிலிருக்கும் கறையாக
ஏதோ ஒன்று
உன் பார்வையில்,
என்னைத் துன்புறுத்தி
எதையோ தேட முயல்கிறது
எனக்குள்ளே துழாவி..!

அழகிய வர்ணங்களால்
வரையப்பட்ட ஓவியம்,
ஆனாலு
பிசாசுகளின் கோரத்தாண்டவ சித்தரிப்பாக
ரசிக்க முடியாத சங்கடம்!

அழகிய பூவின் இதழ்களை
காற்றில் சருகுகளாய்
பிய்தெறிந்த
கொடூரமான கூரிய நகங்களில்
நாசூக்கான நகப்பூச்சு
அலங்காரமாய் தெரியவில்லை!

நிஜத்தின் பிம்மங்களை
பேதமைப் படுத்திய
உன் கண்ணாடி அரியத்தின் கீழ்
என் அன்பை பஞ்சாக எரிக்கும்
சூரியக் கதிரின்
தெறிப்புகள்...!

கைதி.

மூளைக்குள் புதைக்கப்பட்ட
தனிமை உணர்வுகளின்
பொறிகளுக்குள் முடங்கிப் போன
நானும் என் சுயமுமாய்...
சொல்லப்படாத வார்த்தைகளின்
கைதி நான்!
மௌனமாயிருக்கும்
ஒவ்வொரு பொழுதும்
பேச வேண்டிய கட்டாயங்களை
உணரப்பட்ட போதும்
நான், என் இயலாமையோடு
மௌனித்திருக்கிறேன்,
எனக்கான
முட்படுக்கைகளை தயாரித்தபடி...!
குற்றவாளிக்கான சித்தரிப்புகளோடு
வாழ்கைப் போரில்
தோற்றுப் போன கைதி நான்!
பழி சுமத்தெவென்ற ஆயத்தங்களுடன்
கேள்விக் கணைகளோடு
எதிரில் நீ!
என்னை நியாயப்படுத்தெவென்ற
சாட்சியங்கள் புறந்தள்ளப்பட,
போர்த்திறன் முடங்கி
முடுக்கிவிட்ட பொம்மையாக
இப்போது இயங்க வேண்டிய
கட்டாயங்களுடன்...
உன் வழக்காடுமன்றத்தில்
எனக்கான நியாயங்கள்
உனக்கு எதுவுமில்லாமல் போனது
விந்தை!
எறிவதற்காக
நீ தேர்வு செய்த கற்களின்
கனமும்,
வீசப்படும் வேகமும், துரிதமும்
கணிக்கும் முன்
சாய்க்கப்படுகிறேன்...
சந்தப்பமளிக்கப்படாத நிரபராதி
என்ற
சொல்லப்படாத வார்த்தைகளுடன்..!
தப்பிவிட்ட முனைப்பில்
என்னைப் புறந்தள்ளி
நடக்கிறாய் அவசரமாய்..!
உன்னோடான
அந்த நாட்களின் சந்தோஷங்க்ள்
இன்றைய நிகழ்வில்
அகழப்பட்ட புதைகுழியில்
ஆழமாக புதைக்கப்பட
மூளைக்குள் திருத்திய உணர்வுகளைச் சுற்றி
உயரமாய் முட்கம்பி வேலிகளை
என்னை நானே
சிறைப்படுத்துகிறேன்...
இளமையைக் கரைக்கும் அவசரத்தில்
ஆயுளுடன் ஓடிக்கொண்டிருக்கிறேன்..
பழையன மறக்கும் முனைப்புகளுடன்
உன்னை துரத்தும்
விருப்பமின்றி....