Friday, December 28, 2007

பாவம் காலதேவன்!

இதோ
ஒரு வருடம் உதிர்கிறது.
இந்த மரத்தின்
முன்னூற்றி அறுபத்தி ஐந்து இலைகளும்
சருகுப் புளுதிகளாகி
மண்ணோடு மண்ணாக
மக்கி போகிறது..

கால தேவன் தன்னுடைய
ஒரு புத்தகத்தை
மூடி வைக்கிறான்.
அவனுடைய
புத்தகங்களின் பக்கங்களில் தான்
எத்தனை எத்தனை
கறைகள்?
எத்த்னை கறுப்புப் பக்கங்கள்?
அழிக்க முடியாத
குருதிப் புனல்களில்
எழுதப்பட்ட
வரலாற்று தொடர்கள்!


உலகத் தேசிய வரைபடத்தின்
ஒவ்வொரு
இரத்தக் கறைகளும்
அவனுடைய நாளேட்டை
அசுத்தப்படுத்திவிட்டன.
வழமை போல..
கால தேவனின் கண்களில்
கூட
கண்ணீரா?
ஆம்.....
ஐந்தடி மனிதனின்
ஆறறிவு
அகிலத்தைப் படுத்தும் பாட்டைப் பார்த்து
அவன் அழுகிறான்.

மிருகமாக இருந்தவனை
இனமென்றும்,மதமென்றும்
மொழியென்றும்
வாழ்வியலுக்காக
வரையறுத்து
தன்னை தானே மானுடமாக்கியவன்..
இன்று மீண்டும்
அதே வரைமுறைகளைக் கொண்டு
எப்படி
மிருகத்தனமாகினான்...
என்று புரியவில்லை
கால தேவனுக்கு!

ஆயினும்
இன்றைய புதிய தளிர் இலையைப்
பார்க்கிறான்...
நம்பிக்கையோடு...
இனிமேலாவது
இவை கறைப்படாமல் இருக்குமாம்..
பாவம்
கால தேவனுக்குக் கூட
பகல் கனவு வரும் போலும்

No comments: