Monday, March 3, 2008

சந்தேகம்

நிலவிலிருக்கும் கறையாக
ஏதோ ஒன்று
உன் பார்வையில்,
என்னைத் துன்புறுத்தி
எதையோ தேட முயல்கிறது
எனக்குள்ளே துழாவி..!

அழகிய வர்ணங்களால்
வரையப்பட்ட ஓவியம்,
ஆனாலு
பிசாசுகளின் கோரத்தாண்டவ சித்தரிப்பாக
ரசிக்க முடியாத சங்கடம்!

அழகிய பூவின் இதழ்களை
காற்றில் சருகுகளாய்
பிய்தெறிந்த
கொடூரமான கூரிய நகங்களில்
நாசூக்கான நகப்பூச்சு
அலங்காரமாய் தெரியவில்லை!

நிஜத்தின் பிம்மங்களை
பேதமைப் படுத்திய
உன் கண்ணாடி அரியத்தின் கீழ்
என் அன்பை பஞ்சாக எரிக்கும்
சூரியக் கதிரின்
தெறிப்புகள்...!

கைதி.

மூளைக்குள் புதைக்கப்பட்ட
தனிமை உணர்வுகளின்
பொறிகளுக்குள் முடங்கிப் போன
நானும் என் சுயமுமாய்...
சொல்லப்படாத வார்த்தைகளின்
கைதி நான்!
மௌனமாயிருக்கும்
ஒவ்வொரு பொழுதும்
பேச வேண்டிய கட்டாயங்களை
உணரப்பட்ட போதும்
நான், என் இயலாமையோடு
மௌனித்திருக்கிறேன்,
எனக்கான
முட்படுக்கைகளை தயாரித்தபடி...!
குற்றவாளிக்கான சித்தரிப்புகளோடு
வாழ்கைப் போரில்
தோற்றுப் போன கைதி நான்!
பழி சுமத்தெவென்ற ஆயத்தங்களுடன்
கேள்விக் கணைகளோடு
எதிரில் நீ!
என்னை நியாயப்படுத்தெவென்ற
சாட்சியங்கள் புறந்தள்ளப்பட,
போர்த்திறன் முடங்கி
முடுக்கிவிட்ட பொம்மையாக
இப்போது இயங்க வேண்டிய
கட்டாயங்களுடன்...
உன் வழக்காடுமன்றத்தில்
எனக்கான நியாயங்கள்
உனக்கு எதுவுமில்லாமல் போனது
விந்தை!
எறிவதற்காக
நீ தேர்வு செய்த கற்களின்
கனமும்,
வீசப்படும் வேகமும், துரிதமும்
கணிக்கும் முன்
சாய்க்கப்படுகிறேன்...
சந்தப்பமளிக்கப்படாத நிரபராதி
என்ற
சொல்லப்படாத வார்த்தைகளுடன்..!
தப்பிவிட்ட முனைப்பில்
என்னைப் புறந்தள்ளி
நடக்கிறாய் அவசரமாய்..!
உன்னோடான
அந்த நாட்களின் சந்தோஷங்க்ள்
இன்றைய நிகழ்வில்
அகழப்பட்ட புதைகுழியில்
ஆழமாக புதைக்கப்பட
மூளைக்குள் திருத்திய உணர்வுகளைச் சுற்றி
உயரமாய் முட்கம்பி வேலிகளை
என்னை நானே
சிறைப்படுத்துகிறேன்...
இளமையைக் கரைக்கும் அவசரத்தில்
ஆயுளுடன் ஓடிக்கொண்டிருக்கிறேன்..
பழையன மறக்கும் முனைப்புகளுடன்
உன்னை துரத்தும்
விருப்பமின்றி....

Wednesday, February 13, 2008

நீ

ஏனிப்படி மாறினேன்?
உனைப் பார்த்த கணத்தில்
உயிர் சிதைந்து மண்டியிட்டேன்!
உடல் பற்றிய உருவமில்லா
தீயில்
மனக் கருகியதோ?
மருகியதோ?

என் கணத்தாக்கங்களை
ஸ்தம்பிக்க வைத்த
உயிர் கொல்லி!

பகலுக்காய் ஏங்கினேன்
உனைப் பார்க்க வேண்டி..
நேரத்துக்கு தூங்கினேன்
நீ வரும்
என் க்னவுகளுக்காண்டி..

மரணத்தை விட கொடிய நொடி
உன் பிரிவின் நாழி!
எரிமலையாய் தகிக்க
ஒரு துளி புன்னகையில்
உயிர் தந்து கொல்கிறாய்.
நீ!

காதல்

மானுடத்தின் சாபக்கேடா
அல்லது
விமோசனமா
என்று விடை கிடையாத
புதிர்!

உயிரின் பூகம்பத்துக்கு
ஊடகம் !
உணர்வுகளிலலூட்உருவும்
மின்னிறக்கம்!
உயிரோடு ஒரு வதை!
உயிரையும்
எரித்துவிடும் சிதை!

தூர இருந்து ரசித்த போது
ரோஜாவாய் சிரிக்கும்
அனுபவித்த பின் தான்
முள்ளாய் குற்றும்
பிரிவுகளால்..

யாதுமாகி நின்று
உருக்கொடுத்து எழுப்பும்;
சமயத்தில்
யாதுமற்றதாக்கி
உருக்குலைத்து அழிக்கும்

Monday, February 11, 2008

எனக்கான வதை..!

தேடலுடலான காத்திருப்புகளை
விதியாக தீர்ப்பு எழுதி வைத்து
காதல் என்ற வரம்
வதையாகத் தந்தவன்
நீ!

முந்திய மாலைப் பொழுதில்
தேன் முகிழ்த்த வண்டு
விலகிப் போன பாதை
பார்த்து
வாடிப் போன மலர்
மாலையாகவும் வழியில்லை
மணக்கவும் முடியவில்லை...

உன் தோள் சாய்ந்த பொழுதுகள்
காதலை ஒரு மைல் கல்லாக நினைத்தேன்..
உன்னைப் பாராத நாட்களில் தான்
உறைக்கிறது
அது வெறும் சுமைக் கல் என்று!

நீயில்லாத நேரங்களில்
வெறுமையாகிப் போன வாழ்கையை
எதை வைத்து நிரப்ப?
உன்னைத் தொடர்ந்து வருவது
உன் நிழல் என்று நினைக்காதே
கூடவே வருவது என் உயிர்.
பத்திரமாக
திருப்பி அனுப்பு...
அல்லது கல்லறையில் தான்
காத்திருக்கும்
என் காதல்!

ஏக்கங்கள் அரித்த மனது
புற்றாகிப் போக
பிரிவு என்ற சர்ப்பம்
அனாக் கொண்டாவாக அணைத்து
மூச்சடைக்க வைக்கிறது!

உன்னைப் பற்றிய
கனவுகளுக்காக ஏங்கிய கண்களுக்கு
தூங்கும் வழி தெரியவில்லை!
உன் நினைவுகள்
துயில் தடுக்கும் காரணிகளாக..

உயிர்த்திருக்க ஒரு காரணமாக
உன் காதல் மட்டும்
என்னுடன் வைத்திருக்க..
எரி நெருப்பில் சிதையாக
அதுவே
என்னை வதைப்பது
என்ன நியாயம்?

சலனமற்ற குளத்தில்
வலை வீசி மீன் பிடித்து
தரையில் விட்டாய்...
உயிரோடு துடிக்கும் வலியை
நீ ரசிப்பதற்காக என்றே
நானும் வலியை
என்னுடன் தக்க வைக்கிறேன்..

வெறும் காற்றே
சுவாசமாகவும், சுவையாகவும்
மொழி தெரியாத தீவில்
தனியாக நான்!
வாழ்கையின் பாதை
முன்னே நீளமாக
பயமுறுத்தும் எதிர்காலத்தில்
எனக்கென்று துணையாக
உன் காதலுடன் மட்டுமே
பயணிக்கிறேன்.....
தேடலுடனான காத்திருப்புகளில்
எழுதப்பட்ட விதியை
ஏற்று....!

Saturday, December 29, 2007

ஆழிப் பேரலை - 2004. நினைவு!

எத்தனை உயிர்கள்? எத்தனை உறவுகள்?
காவு கொண்ட நாளது..
எத்தனை காலம் போனாலும்
மாறாத ரணமது ,

அலைகளெல்லாம் ஆழியாகி அழிக்க வல்லது
இயற்கை அன்னையின்
ஊழித் தாண்டவத்தின் உச்சம் கொடியது..
விழுங்குவது தன் மக்களுயிர் என்று
விளங்கிய படியே அன்னை பசியாறிய நாளது..

கால தேவன் நாளேட்டில்
கடற்கரையின் கறைகள் தீட்டிய கோரம்!
கடல் கலந்த அலைகளை மறைத்த
பிணக்குவியல்களின் பாரம்!

கொள்ளி போட நாதியின்றி..
கோடித் துணி போர்த்த ஆளின்றி
அள்ளி எடுத்து குப்பையாய்
ஆங்கோர் தீவின் ஓரத்தில்
எரிந்த சாம்பல் மேடுகளில்
என்பு பொறுக்க்கி , ஈமை செய்ய
எவரும் இங்கில்லாமல்
பொங்கிய புனல் வந்து
அனல் கொண்டு குவித்த நாளது..!

Friday, December 28, 2007

பாவம் காலதேவன்!

இதோ
ஒரு வருடம் உதிர்கிறது.
இந்த மரத்தின்
முன்னூற்றி அறுபத்தி ஐந்து இலைகளும்
சருகுப் புளுதிகளாகி
மண்ணோடு மண்ணாக
மக்கி போகிறது..

கால தேவன் தன்னுடைய
ஒரு புத்தகத்தை
மூடி வைக்கிறான்.
அவனுடைய
புத்தகங்களின் பக்கங்களில் தான்
எத்தனை எத்தனை
கறைகள்?
எத்த்னை கறுப்புப் பக்கங்கள்?
அழிக்க முடியாத
குருதிப் புனல்களில்
எழுதப்பட்ட
வரலாற்று தொடர்கள்!


உலகத் தேசிய வரைபடத்தின்
ஒவ்வொரு
இரத்தக் கறைகளும்
அவனுடைய நாளேட்டை
அசுத்தப்படுத்திவிட்டன.
வழமை போல..
கால தேவனின் கண்களில்
கூட
கண்ணீரா?
ஆம்.....
ஐந்தடி மனிதனின்
ஆறறிவு
அகிலத்தைப் படுத்தும் பாட்டைப் பார்த்து
அவன் அழுகிறான்.

மிருகமாக இருந்தவனை
இனமென்றும்,மதமென்றும்
மொழியென்றும்
வாழ்வியலுக்காக
வரையறுத்து
தன்னை தானே மானுடமாக்கியவன்..
இன்று மீண்டும்
அதே வரைமுறைகளைக் கொண்டு
எப்படி
மிருகத்தனமாகினான்...
என்று புரியவில்லை
கால தேவனுக்கு!

ஆயினும்
இன்றைய புதிய தளிர் இலையைப்
பார்க்கிறான்...
நம்பிக்கையோடு...
இனிமேலாவது
இவை கறைப்படாமல் இருக்குமாம்..
பாவம்
கால தேவனுக்குக் கூட
பகல் கனவு வரும் போலும்