Wednesday, August 15, 2007

மீள வரல்



முட்கள் பறிக்கப்பட்டுவிட்டதாய்,
பரிசோதிக்கப்பட்ட ரோஜ மலர்களென்று
வாழ்கையில் நம்பியிருந்த
எதுவும் சரிவரவில்லை!

பழகிய மனிதர்களின்
போலிச் சாயம் வெளுத்துப் போக
பூமிப் பரப்பில்
நான் மட்டும் என்னுடன்
எஞ்சிய தனிமையில்....!

யாராலும் புரிந்து கொள்ள முடியாத
என்னாலும் விளக்கவியலாத
என் உணர்வுகளின்
வலிகள்
ஆழமாகக் கிழித்த ரணங்களில்
இன்னமும் சீழ் வழிந்த படி...
இதயம்
துயரத்தில் நாறிப்போயிருக்கிறது...!

அன்னியமானவர்களின் பார்வைகளிலும்
அருவருப்பானவளாய் பதிகின்றேன்.
நான் விரும்பாமலேயே...
ஒடுங்கிப் போன குறுகலான
இந்த அறைக்குள்
என்னை நானே முடக்கியபடி
இன்னும் எத்தனை நாட்கள்...?

பழைய படி
காலங்கள் திசை மாறுகின்றன...
இன்னொரு தடவை
பறவைகள் தம் குஞ்சுகளுடன்
மரங்கள்
புதிதாய் உடுத்திக் கொண்ட
தளிர்களுடன்....
எல்லாம் மாற்றங்களோடு...!

ஆனால்...
என்னைச் சுற்றிய உலகில்
மட்டும்
வெளிறிப் போன சாய முகங்கள்
பூட்டிய
இரக்கம் தராத மனிதங்கள்
முட்கள் மட்டும் எனக்கு
பரிசுகளாக...
மாறாத வலி கொடுக்கும்
தனிமைச் சகதியும்
புதைந்து கொண்டிருக்கும் நானும்...
மாறவில்லை...

ஆனாலும் மாற வேண்டும்...

பயங்கரமான நகங்களும்
கோரமான பற்களுமாய்
வாழ்கை கொடூரமாக
என்னைத் துரத்துவதை
வேடிக்கை பார்க்கும்
வெறிபிடித்த மனிதர்கள்...!

இன்னமும் ஆழமாய்
புதைகுழிக்குள்
நான்
புதைந்து போய்விட்டதாய்
அவர்கள் தீர்மானித்த
அந்த நொடியை
ஏற்க மறுத்த
என்னுடைய சுயம் ...


பௌதீக வலியைவிட
தன்மானம் கொடூரமாக
வலித்தது...!

என்னை நானே அகதியாய்
எத்தனை நாள்
பொறுப்பது?
வலுவிழந்த மனதை
தூக்கி நிமிர்த்த வேண்டி
என்னுள்ளேயே கெஞ்சிய
என்னுடைய இன்னொரு பங்கு...!

எழுவதற்கு
முன்னான தவழுதலில்
என்னுள் பிணைக்கப்பட்ட விலங்குகளை
உடைக்க வேண்டிய
கொடூரமான நிர்ப்பந்தங்கள்
பயமுறுத்தின..!

இறுக்கமான உணர்வுகள்
தளர்த்தி
தவிர்த்து
என்னை விடுவித்து
நான்
வெளியேற வேண்டும்...!

யாரையும் நம்பாமல்
எனக்கு
நான் மட்டுமென்ற
துணையுடன்
உறை நிலையிலிருந்து மீள வேண்டிய
திருப்பு முனையை
நிர்ணயித்துக் கொண்ட போது
எனக்கு யாருமே தேவைப்படவில்லை.

என்னை மட்டுமே
நம்ப வேண்டிய நிர்ப்பந்தம்!
மற்றவர்களின் அனுமானங்களை
அலட்சியங்களாய் துப்பிவிட
நான்
ஒரு அற்பமான இருட்டிலிருந்து
வெளீயேற்றப்பட்டேன்..!

கடினமான கடிவாளங்கள் உதறி
அனுபவங்களில் நிறையவே
கற்றுத் தெளிந்து
நிமிர்ந்த போது
பாதை மாறியிருந்தது...
புதிய பயணத்துக்காய்...
சற்றே இருள் விலகினாற் போல்...!

சுவாசங்கள் இலேசாக
நிமிர்கிறேன்..
மீள வரும் போது
சில வலிகளை
மென்று கொள்ளத் தான் வேண்டும்..!
பயங்கள் ஆற்றி..தெளிந்த பின் ...
பரவாயில்லை....
வாழ்கை ஒன்றும்
அவ்வளவு கடினமில்லை....

No comments: