Wednesday, August 15, 2007

மகளுக்காக...



வயிற்றிலிருப்பது பெண் சிசு என்று அறிந்த பின் பேதைத் தாய் பதை பதைத்தாள். அவள் வயிற்றிலிருக்கும் சிசு அம்மா என்னை வாழ விடு என்று கெஞ்சுவதாக உணர்வில் தவித்துப் போனாள். இன்னொரு தரம் ஒரு பெண் சிசு,...என்னைப் போலே அவள் வாழ்வுமாகிவிடுமோ அல்லது பிறந்த கணமே காணாமல் போய்விடுமோ என்ற கலக்கம் தாய்க்கு! ஆனாலும் மகளுக்காக ஒரு முடிவு எடுக்கிறாள்...சரிவருமா என்று சொல்லுங்கள்...!



பெண் புத்தி பின் புத்தி
அதில்
உன் புத்தியும் சேர்த்தி!

எங்கிருந்தோ ஒருவன்
விதியை எழுதுகிறானாம்,
உன் விதியை
மாற்றி எழுத
மதியிருந்தால்
நிம்மதியாய் நானிருப்பேன்.

பேதை சிசுவே!
உலகப் படம் பார்க்க விரும்புகிறாய்
உன்னை படம் போட
ஒரு கூட்டமே காத்திருக்கிறது.
இங்கே..!

சக்தி இருந்தால்
என் ஆயுள் காலம் வரை
வயிற்றுக்குள்ளேயே
உன்னை சுமந்து திரிவேன்...
மகளே!
நீ
பாதுகாப்பாய் இருப்பாய் அங்கு!

என் முலை திருகி
பால் பருகும் முன்னமே
உன் உயிர் திருகி எறிய
ஒரு கிண்ணம் கள்ளிப் பால்
வைத்திருக்கிறான்
உன்னப்பன்!

பிரசவித்த மயக்கம்,
என்
கண் விழிக்கும் முன்னமே
நீ
மீளாத்துயிலாகிவிடுவாய் ...
யம தூதர்கள் தூரத்திலில்லை...
என் கர்ப்பகிரக வாசலிலேயே...
காத்திருப்பார்கள்!!

என்னுள்
உனை விதைத்தவனே
இன்று
உன் உயிரை அறுவடை செய்ய
நெல்மணிகள் எண்ணிக் கொண்டிருக்கின்றான்...!!

கருவறைக்குள்ளிருக்கும்
உனக்கு
கல்லறைக்கு இடம் தேடுகிற
உறவு முறைகளையா
தேடுகிறாய் சந்திக்க?

நீ பிறந்து
ஒரு கணம் அம்மா என்றழுதால்
ஆயுள் வரைக்கும்
என்னை கொல்ல
அது ஒன்று போதும்
இவர்கள் உன்னைக்
கொன்ற பின்...!!

வண்ணச் சட்டை மாட்டி
வடிவாக தலை சீவி
சின்னக் கை பற்றி
சிங்காரமாய் உனை தூக்கி
என்னமாய் பவனி வரலாம்
எல்லாமும்
சரியாயிருந்தால்...?

ஆனால்....????

இப்போதெல்லாம்
நான்
ஆண்டவனை வேண்டுவதில்லை,
அவனும் ஆண்பால் என்பதால்...
அவனில் சரிபாதியாய்
இருப்பவளும் அனுமதிக்கிறாளே..
அதனால்.....
அவளும் வேண்டாம்...!

யாருமற்ற தனிமையில்
நிராயுத பாணியான நான்
அடிமையே தவிர,
போராளியல்ல
உன்னைக் காப்பாற்ற!

ஆனாலும்...இப்போது
ஒரு போராட்டம் தேவை தான்
தாய்மை
என் உரிமை !
தீர்மானம் போடவும்
தீர்த்துக்கட்டவும் இவர்கள் யார்?

பாலூட்ட மட்டுமா?
பாதுகாக்கவும்
நான் மட்டும் தான்
உனக்கு!!


சரி சிசுவே!
உன் கருவறைக் கனவை
கலைக்கவில்லை!


உனக்கொரு உலகம்
சமைக்க
என் சிறையை உடைப்பேன்!
நாளைக்கே நான்
இவர்களிடம் காணாமல் போவேன்...

இன்னொரு இடத்தில்
உனக்காக மட்டுமேயான நான்...!
உன் வரவுக்காக மட்டுமே
என் வாழ்கையின் காத்திருப்புகள்!

இத்தனை காலமும்
என் சுற்றத்தின் வார்த்தைகளில்
வாழ்கையை
ஏமாந்தேன்!
இன்று உன் வார்த்தையை
என் வாழ்கையாக்குகிறேன்!


ஆனாலும் எச்சரிக்கிறேன்!

உலகம்
ஒரு சாக்கடை!
ஈதேனின் பூங்காவனமென்று
பிரவேசிக்காதே!

இங்கே...
பூக்களாய் சிரிக்கும்,
பசுமையாய் பேசும் மனிதர்களை
நம்பி
வாழ்கைப் பாதையில்
அலட்சியமாய் பிரயாணிக்காதே...
அத்தனைக்குமடியில்
கண்ணிவெடி புதைத்த
களவுகளிருக்கும்.....
நொடியில் நொருங்கிவிடுவாய்!!!

உன் கனவுகளூக்காக மட்டுமே
என் கருவறையுடன்
இந்த எல்லகளைக்
கடக்கிறேன்...

என்னுடைய
உண்மையான வாழ்கையை
இங்கே தான் தொடங்கப் போகிறேன்,
உன்னுடன்
உன் கனவுகளுக்காக....!!

காத்திருக்கிறேன்
ஒரு புதிய விடியலுக்காய்,
உனக்கும் சேர்த்து..!

No comments: