Wednesday, August 15, 2007

கிளியும் அவளும்....



என்றைக்குமே மறக்க முடியவில்லை
ஆசிரியை சொன்ன
கிளிக் கதை...

பறக்க வேண்டிய பறவையை
கூண்டில் வைப்பாராம்
விரிக்க வேண்டிய இறகுகளை
வெட்டியே விடுவாராம்...
விழுந்த போது
தூக்கிவிடாமல்
விழுந்து விழுந்துசிரிப்பாராம்...
புரியவில்லை..
ஆசிரியையின் வேதனையும்
விளங்கவில்லை...
அப்போது....


காலங்கள் போனது..
பள்ளியின் பாதியில்
பருவம் வந்துவிட்டதாம் எனக்கு!

பாடங்கள் போதும்
பாத்திரங்கள் துலக்கு..
சமையல் பாடங்கள் படித்து பழகு
என்றாள் பாட்டி.!

என்
வார்த்தைகளை குறைத்தார்.
பார்வையால் முறைத்தார்.
வீதியின் என்னடி பேச்சு ?
விளையாட்டுக்கு முற்றுப் புள்ளி
வைத்துவிட்டு
முற்றத்துக் கோலத்தில்
புள்ளி வை சமர்த்து என்றார் அப்பா!


தாவணியை போர்த்து
நிலம் பார்த்து நடந்து..
போற இடத்தில் பெயர்
வாங்கு
என்றாள் அம்மா!!

பள்ளியில் பறந்த சிட்டு
பருவம் என்ற கூட்டுப்புழுவானேன்..
இறைக்கை முளைத்து
பறக்கப் பழகும் முன்னேயே
கத்தி விழுந்த
சுதந்திரத் தட்டுப்பாடு!!

புத்தகமாக வேண்டிய
வாழ்கையில்
என் கனவும் இலட்சியமும்
கிழிக்கப்பட்ட அட்டைகளாக
அச்சேற்றும் முன்னாலேயே
அட்சரங்கள் சேதமாக்கி...
குப்பைத் தொட்டிக்குள்
பொறுக்கி
படிக்கப் போவது யார்?

ஓடுகள் வேய்ந்த வீடுமட்டுமல்ல
உறவுகளும் கூடவே சிறைகளாக...
வார்த்தைகளுக்கு
அனுமதி மறுக்கப்பட்ட கைதி!
கட்டாய ஊமை...
கனமான நிபந்தனைகளை
அலங்காராமாய் சுமந்தால் மட்டுமே
நான்
கன்னிப் பெண்ணாம்!

வேறொரு காலச் சுழற்சியில்....
என் வீடு தேடி வந்து
சில மாடுகள் தம்மை
விலை பேசினர்...

ஒவ்வொரு ஏலத்துக்கும்
மாடுகள் உட்கார்ந்திருக்க ...
சந்தைப் பொருளாக
பொம்மையாக
நான் நிற்க...
இந்த தடவையாவது கரை சேருவாளா
என்று குறி கேட்டது
என் குடும்பம்...

நான் விலைபோன
நாளைக் கூட கொண்டாடினார்கள்..
அன்று தான்
ஒரு விலங்கு எனக்கு
தாலியென்று சொல்லி
விலங்கு பூட்டியது!!

அன்று தான்
என் அம்மா சொல்லி
நான் பத்திரப்படுத்தின பொக்கிஷம்
கற்பழிக்கப்பட்டது...
அம்மா கடவுளுக்கு நன்றி சொன்னாள்...
என் மகள் வாழ்ந்துவிட்டாளாம்...

இரவுகளில் வேட்கையும்
வேட்டையும் ....
அணைப்பும்... வித்தியாசமாய் இருப்பான்..
பகலில்...
எதிரியாய் மாறிவிடுகிறான்...
ஒவ்வொரு கணவனுக்குள்ளும்
ஒரு அன்னியன் இருப்பானோ?

நான் கற்பழிக்கப்பட்டதற்கான சாட்சி
என் வயிற்றில்...சிசு!
அவனுக்கு பெருமை..
அவனுடைய ஆண்மை
நிரூபிக்கப்பட்டதில்...

மாமி சொல்கிறாள்...
தலைச்சன் பிள்ளை ஆண்பிள்ளை
குடும்ப வழக்கில்...
இது தப்பி தவறி...பெண்ணானால்...
அப்ப வச்சுக்குவேன் ..

சே....
களைத்துப் போனது
என் மனமா?
மரத்துப் போனது என் உணர்வா?
கறுப்பாய் தெரிவது என்ன...
அங்கே,,,?
எதிர்காலமா
வாழ்கையா...??

சில்லிட்ட உணர்வுகள்
மெல்லியதாய்...வயிற்றை தடவுகிறேன்...

அட சிசுவே!
உன் அம்மாவுக்கு
இப்போது புரிகிறது
அந்தக் கிளியின் கதை...!!

வல்லூறுகள் வட்டமிட்டிருக்கும்
அல்லது
கடுவன் பூனை கண்டிருக்கும்..
தள்ளிப் பறக்கவும் இயலாமல்
தத்தளித்து இரையாகியிருக்கும்
மிருகத்தின் வதையில்...
உன் அம்மாவைப் போல...

நீ யார்?
என்னைப் போல் பெண் பாவமா?
அல்லது
இன்னொரு பெண்ணை
வதை செய்ய வரும்
ஆண் பாவியா?
எதுவாயினும்...
நீ வர வேண்டுமா... வெளியில்....?

No comments: