Friday, August 17, 2007

இயலாமை


நான்
அமைதியாய் இருப்பது போல்
பாவனை செய்து பார்க்கின்றேன்,
ஆயினும் கடினமாகவே இருக்கின்றது
தினமும் நானாக இல்லாமல் நடிப்பதென்பது...
என்னைச் சுற்றிய சிந்தனைகளில்
அமிழ்த்தவென்று முயன்ற எத்தனிப்புகள் தோற்று
என்னை விட்டு நானே வழுக்கி
எங்கே போய்க் கொண்டிருக்கின்றேன்?

குழப்பங்கள் இல்லாத என்னுடைய சுயத்துக்கு
இனி எங்கே நான் போவது?
கிளறிக் கிளறி நாறிப்போன குப்பைகளுக்குள்
மடிந்து மக்கி உக்கிப் போனது என்ன,
வேட்கை நிறைந்த இலட்சியங்களும்
அரை குறையாய் குற்றுயிராய்
உடைந்து போன கனவுகளுமா?
மலர் தூவும் வசந்தமாய் கனவு காண
புயல் உமிழ்ந்த உக்கிரமான தோல்வியில் காதல்
மரணித்துப் போன யதார்த்தம் சுட்ட இதயம்
மயானமாய்.. சூனியமாய்..வெறிச்சுப் போய்...


அழகாக மெருகேற்றப் பட்ட விதானங்களுடைய
உலகத்தையும்
ஆசீர்வதிக்கப்பட்ட அனுபவங்களையும் அடையும் வரை
காலம் எனக்காக காத்திருக்க மாட்டேனென்ற அநியாயத்துடன்
விரைந்து விரைந்து பயணப்பட
விலகிப் போன உறவை துரத்தும் திராணியில்லை..
மூச்சிரைக்க மூப்படையும் உயிர்க்க்கூட்டைக் காவிய
என்னுடைய ஆயுளின் பயணித்தலில்
வாழ்கையின் கவனப் பிசகல்கள்
சரி செய்யப்படவியலாத தரவுகளுடன்
மிகப் பிழையான கணக்காகிப் போனது போல..?

சூனியம் வைக்கப்பட்ட விதியில்
குழிகளுக்குள் தள்ளிவிட எதிரிகள் தேவைப்படவில்லை,
தூக்கி விட நண்பர்களும் கிடைக்கவில்லை..
என்னைப் பற்றிய கழிவிரக்கங்களுடன்
நூலளவு நம்பிக்கையை பற்றிய தொங்கலில்
ஊசலாடிய எதிர்காலத்தின் வேயப்பட்ட நூலெணியில்
என்னை நானே தாங்கிக் கொண்டு பரிதாபமாக....

வசந்தத்துக்கும் வலிகளுக்கும் மத்தியில்
அன்புக்கும் வெறுப்புக்குமான மையத்தில்
வாழ்கைக்கும் மரணத்துக்குமான இடைப்பட்ட ஆயுளில்
எனக்கும் வலுவிழந்த என்னுடைய சுயத்துக்கும் நடுவில்
அந்தரத்தில் தொங்கும் பாதைகளில்
முட்கள் துருத்திய அபாயம்...

வாழ்கைச் சாகரத்தின் சுழிகளுக்குள்
தொலைக்கப்பட்ட காதலின் பின்னான நிகழ்வுகளில்
ஆர்ப்பரிக்கும் நினைவலைகளின் ஆர்ப்பரிப்பில்
நீலமான ஆழமான, ஆல காலமான மனம்
என்னை அமிழ்த்தி மூச்சிரைக்க வைக்கிறது...
வலி கண்ட இதயம் போராடிய களைப்பில்
கேட்டது
நிற்கட்டுமா ? இருக்கட்டுமா?

No comments: