Wednesday, August 22, 2007

முட்டாள்.

உன்னைப் பார்த்த நேரத்தில்
உயிர் நாடிகளில் குளிர் காய்ச்சல்
உறங்க விடாமல்
உயிர் வதைத்தது!!

தேடி வந்து வதை தந்துவிட்டுப் போனவனே
எந்த ஜென்மத்துப் பகையை
இன்று
இங்கு காதலலென்று சொல்லி
பழி தீர்க்கிறாய்?

என் நீரோடை மனதில்
சின்னதாகக் காதல் கல் எறிந்தாய்
என்றிருந்தேன்...
எப்படி இப்படி
இதயத்தில்
பாறாங்கல்லாய் கனக்கிறது?

நேரங்கள் உருண்டோடும் போதெல்லாம்
உன் பிரிவை
கணங்களால் கூட்டியது.
மறு முறை
உன்னைச் சந்திக்கும் வரை
என் கணத்தாக்கங்கள் ஸ்தம்பித்துப் போயின.

உனை காணாத வேளைகளில்
கடிகார முட்களுக்கும்
வேகம் வரவில்லை,
எனக்கு வேதனையே!!

நீ வந்த பின்
அவற்றுக்கும் வேகம் கூடியது
என் நாடித்துடிப்பைப் போல்,
அதுவும் வேதனையே...!

உன்னைப் புறந்தள்ளி
நான் தப்பிப்பதற்கான எந்த வழியுமில்லை!
காதல் என்ற சாபத்துடன்
என் துருப்பிடித்த இதயமும் எண்ணங்களூம்
உன்னை உள்வாங்கிய பின் தான்
சுரணை ஏசுகிறது,
நான் எத்தகைய முட்டாளென்று...!!

No comments: